புதன், 26 டிசம்பர், 2012

தங்கக் கூண்டு

இயற்கையோடு போராடி
கால ஓட்டத்தின்
எதிர் திசையில்  பயணித்து..
உலகம் கூடு  அடையும் நேரம்
இரை தேடப் பறந்து...
பொங்கலையும் இட்லியும்
மறந்து
பீசாவையும் பர்கரையும் கொண்டு
வயிறு நிரப்பி
கேமரா கண்களுக்கு
அஞ்சியபடி
அன்றாடம் உழைத்து
அம்மா அப்பாவோடு
ஆகஸ்டு 15 யும் மறந்த
நவீன அடிமைகள்....

மனிதன் நீ

என்ன சாதியோ என
கடிந்து கொண்ட
உன் கும்பத்தாரிடம்
என் பெண்சாதி என
கை பிடித்த போது
உன்னில் கண்டேன்
மனித சாதியை!!

அந்த நாட்கள்

அந்தரங்கக் கிளு கிளுப்புக்காய்
அக்கிரம சினிமாக்காரர்கள் சொல்லும்
அந்த மூன்று நாட்கள் எதிலும்
பேசப் படுவதே இல்லை
உயிர் பிசைந்து
உதிரம் சொட்டும்
பெண்ணுடம்பின்
வலியும் வேதனையும்!

வலி

காகமாய் முற்றத்தில்
வந்து அமர்வாய் என
கர்ப்பிணி அக்காளின்
குழந்தையாய்  பிறப்பாய் என
காட்சியற்ற உருவாய் எனை
சுற்றியே இருப்பாய் என
நம்ப முடியாததையும்
நம்பக் கூடாததையும்
நம்பித்தான் தொலைக்கிறேன்
ஆறாத மனசை ஆற்றுப் படுத்த....

கலியாணக்கனவு



அவருக்குப் பிடித்த உணவு 
அவருக்குப் பிடித்த உடை
அவருக்குப் பிடித்த நிறம்
அவருக்குப் பிடித்த மனிதர்கள்    
என நீளும் பட்டியல்
அனுசரித்துப் போ என்ற
அம்மாவின் அறிவுரை
என் பேச்சில் உடையில் நடையில்
உணர்வில் உறக்கத்தில்
நான் இல்லாத என்வாழ்க்கை
அகல கண் விழித்தபடி
அதல பாதளத்தில் விழும்
அபலை ஒருத்தியின் அழுகுரலன்றி
கலியாணம் பற்றிய கனவு
வேறு எதுவும் எனக்கில்லை..
          த.ஜீவலக்ஷ்மி   

ஏதேனுமொன்று!



வழக்கமாய் வைக்கும்
நெற்றிப்  பொட்டின் வடிவ மாற்றம்
அன்றாடம் பயணிக்கும் பாதைக்கான
புதிய வழித்தேடல்
எதிர்ப்படும் வாகனத்தில் 
சிறு குழந்தையின் கை அசைப்பு  
தோழமையின் நேசத்தோடு வந்து விழும்
ஒற்றைக் குறுஞ்செய்தி   
வழிபோக்கில் காணக் கிடைத்திட்ட
பசுவிற்கும் கொக்கிற்குமான நட்பு 
தொலைவில் ஒலிக்கும்
விருப்பப் பாடலின் ஒலிக்கீற்று
இதில் ஏதேனும் ஒன்று
போதுமாய் இருக்கிறது
இயந்திரத்தனமான வேலை நாளொன்றை 
இலகுவான மனநிலையோடு
இனிதாய்க் கழித்திட....  
 த.ஜீவலட்சுமி

நம்பிக்கை நாற்றுகள்




இனி எங்கே வளரப் போகிறது என 
வித்திட்டவளே மறந்திட்ட நிலையில் 
திடீரென துளிர்த்து நிற்கும் 
பட்டுப் போன தென்னங்கன்று 

மருத்துவரும் கை விரித்த  போதும் 
தலை திரும்பி வெளி வந்த கன்றை 
எப்படியும் பிரசுவித்து விட வேண்டுமென 
வலு திரட்டிப் போராடும் எருமை 

பெற்றெடுத்த பிள்ளைகள் கை விட்ட போது
சுயத்தை மட்டுமே நம்பியபடி 
முதுகுக்கூன் மேல் கூடை வைத்து 
கீரை விற்கும் பாவாயி பாட்டி 

விளிம்புநிலை வாழ்வை சுமந்தபடி 
அன்றாடத் தேவைக்காய் அன்றாடம் உழைத்துக் கொண்டே 
பிறரின் உரிமைக்காய் குரல் கொடுக்கும் 
சேரித் தெரு மாறி அக்கா 

இப்படியாய் இன்னும் சிலர் 
புதியதாய் பிறக்க வைத்து இருகிறார்கள் 
முடிந்தே விட்டது வாழ்க்கை என நான் 
மூச்சடைத்து நின்ற தருணங்களில் எல்லாம்!!!

செவ்வாய், 25 டிசம்பர், 2012

மனுஷி



       மனுஷி

கக்கூசுக்கு வக்கிலாம 
காட்டுப் பக்கம் ஒதுங்கற போதும் 
சோத்துக்கு வழியில்லாம 
சோகையில வாடற போதும் 
வரலையே ஐயா உமக்கு 
பொம்பள மேல சாதிப் பாசம் 
ஆடுவெட்டி காடுவெட்டி யாரானாலும் 
ஈரோட்டு மருத்துவம் படிக்காத 
உமக்கு யாருதான் மருத்துவம் பார்க்க
மயக்கறவன் பின்னால மயங்கி ஓட 
மந்தையாட பொம்பள நாங்க?
பறையன் சக்கிலி பார்ப்பான் 
மனசுப்படி மனம் மணமுடிக்க 
நாங்க துணிஞ்சு நாளாச்சு 
சாதிப்  பக்கம் யார்  நின்னாலும் 
நாங்க நீதிப் பக்கம் தான்......

சாதிப் பேரை வெளியில் சொல்ல 
வெட்கப்படும்  உன் சாதிக்காரி

திங்கள், 16 ஜனவரி, 2012

உறுதிப்படுத்துகிறாய்.....

என் காயம் பார்த்து
அழும் போதும்
காதல் சொல்லத்
தயங்கும் போதும்
உறுதிபடுத்துகிறாய்
அழுகையும்
வெட்கமும்
ஆண்களுக்கும்
உண்டென்று