திங்கள், 7 ஜனவரி, 2013


              நன்னீர்

என்னுருவம் தீட்டி வைத்த
உன் தூரிகையின் கை வண்ணமும்
உன்னுயரம் கொண்டு
நான் எழுதிய கவிதையும்
பரிமாறப்பட்டது ஒரு தேநீர் சந்திப்பில் தான்!

தீர்க்கதரிசனத்துக்குரியவை
அந்த  தேநீர் கடை நிமிடங்கள்
நம் நட்பின் ஆழம் அதிகரித்தது
தேநீர் விடுதிகளில் தான்!

சிலசமயம் அடுமனைகளில்
சிலசமயம் சாலையோரக் கடைகளில்!
பாலினப் பேதமற்றுப் பருகியிருக்கிறோம்
நட்பின் ஒவ்வொரு சொட்டு இரசத்தையும்
தேநீரோடு!

செல்வச் செழிப்பைச் சொல்லிடும்
தேநீருடனான நொறுக்குகள்
அவற்றோடு பேசி இருக்கிறோம்
பெருவிருப்பான அரசியலை
பெரும்சோகம் கவிழும் இன அழித்தொழிப்பை
அன்பிசைக்கும் நேசத்தை
கழுத்தறு பட்ட துரோகத்தை
யாருக்கும் சொல்லிடா இறந்த காலத்தை
திட்டமிடும் எதிர்காலத்தை என எல்லாம்!
புரிதலுக்கும் பகிர்தலுக்குமான உன்னதம்
நிரம்பி வழிந்து இருக்கிறது
அந்த ஒரு கோப்பை தேநீரில்!!!



புதன், 26 டிசம்பர், 2012

தங்கக் கூண்டு

இயற்கையோடு போராடி
கால ஓட்டத்தின்
எதிர் திசையில்  பயணித்து..
உலகம் கூடு  அடையும் நேரம்
இரை தேடப் பறந்து...
பொங்கலையும் இட்லியும்
மறந்து
பீசாவையும் பர்கரையும் கொண்டு
வயிறு நிரப்பி
கேமரா கண்களுக்கு
அஞ்சியபடி
அன்றாடம் உழைத்து
அம்மா அப்பாவோடு
ஆகஸ்டு 15 யும் மறந்த
நவீன அடிமைகள்....

மனிதன் நீ

என்ன சாதியோ என
கடிந்து கொண்ட
உன் கும்பத்தாரிடம்
என் பெண்சாதி என
கை பிடித்த போது
உன்னில் கண்டேன்
மனித சாதியை!!

அந்த நாட்கள்

அந்தரங்கக் கிளு கிளுப்புக்காய்
அக்கிரம சினிமாக்காரர்கள் சொல்லும்
அந்த மூன்று நாட்கள் எதிலும்
பேசப் படுவதே இல்லை
உயிர் பிசைந்து
உதிரம் சொட்டும்
பெண்ணுடம்பின்
வலியும் வேதனையும்!

வலி

காகமாய் முற்றத்தில்
வந்து அமர்வாய் என
கர்ப்பிணி அக்காளின்
குழந்தையாய்  பிறப்பாய் என
காட்சியற்ற உருவாய் எனை
சுற்றியே இருப்பாய் என
நம்ப முடியாததையும்
நம்பக் கூடாததையும்
நம்பித்தான் தொலைக்கிறேன்
ஆறாத மனசை ஆற்றுப் படுத்த....

கலியாணக்கனவு



அவருக்குப் பிடித்த உணவு 
அவருக்குப் பிடித்த உடை
அவருக்குப் பிடித்த நிறம்
அவருக்குப் பிடித்த மனிதர்கள்    
என நீளும் பட்டியல்
அனுசரித்துப் போ என்ற
அம்மாவின் அறிவுரை
என் பேச்சில் உடையில் நடையில்
உணர்வில் உறக்கத்தில்
நான் இல்லாத என்வாழ்க்கை
அகல கண் விழித்தபடி
அதல பாதளத்தில் விழும்
அபலை ஒருத்தியின் அழுகுரலன்றி
கலியாணம் பற்றிய கனவு
வேறு எதுவும் எனக்கில்லை..
          த.ஜீவலக்ஷ்மி   

ஏதேனுமொன்று!



வழக்கமாய் வைக்கும்
நெற்றிப்  பொட்டின் வடிவ மாற்றம்
அன்றாடம் பயணிக்கும் பாதைக்கான
புதிய வழித்தேடல்
எதிர்ப்படும் வாகனத்தில் 
சிறு குழந்தையின் கை அசைப்பு  
தோழமையின் நேசத்தோடு வந்து விழும்
ஒற்றைக் குறுஞ்செய்தி   
வழிபோக்கில் காணக் கிடைத்திட்ட
பசுவிற்கும் கொக்கிற்குமான நட்பு 
தொலைவில் ஒலிக்கும்
விருப்பப் பாடலின் ஒலிக்கீற்று
இதில் ஏதேனும் ஒன்று
போதுமாய் இருக்கிறது
இயந்திரத்தனமான வேலை நாளொன்றை 
இலகுவான மனநிலையோடு
இனிதாய்க் கழித்திட....  
 த.ஜீவலட்சுமி